இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எமோஷனல் பதிவு..! உங்களது மதிப்பு மிக்க விமர்சனங்கள் எனது அடுத்த படங்களில் எதிரொலிக்கும்..!

1

சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படமான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை சம்பாதித்தது. அதற்கு ரசிகர்கள் தரப்பில் இருந்தும் விமர்சகர்கள் தரப்பில் இருந்து பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதில் சிலவற்றை படக்குழுவினர் ஒப்புக் கொண்டனர். சிலவற்றை படக்குழுவினர் ஒப்புக் கொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது இந்த படத்தை திட்டமிட்டே தோல்விப் படமாக மாற்றிவிட்டார்கள் என படக்குழு தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின்னர் வெளியான ரெட்ரோ படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. படம் வணிக ரீதியாக வெற்றிப் படம் என கூறப்படுகிறது. படத்தில் சூர்யாவின் கெட்டப்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக கூறப்பட்டது. படத்தில் இடம் பெற்ற பாடல்களான கண்ணாடிப்பூவே மற்றும் கனிமா பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கனிமா பாடலுக்கு திரைப்பிரபலங்கள் ரீல்ஸ் செய்து போட்டுக் கொண்டு உள்ளார்கள். அண்மையில் கூட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது மகள் மற்றும் மகனுடன் ரீல்ஸ் போட்டிருந்தார்.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 50 நாட்களை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ரெட்ரோ தனிப்பட்ட முறையில் எனக்கு பல எமோஷனலான விஷயங்களை எதிர்கொள்ள வைத்துவிட்டது. தியேட்டரில் ரிலீஸ் ஆன பின்னர் ரெட்ரோ படம் ஒரு போரையே எதிர்கொண்டது. அதுவும் குறிப்பாக வெறுப்பு பிரச்சாரங்களுக்கு எதிராக ரெட்ரோ பெரும் போரையே எதிர் கொண்டு அதில் வெற்றியும் பெற்றது. இவையெல்லாவற்றையும் கடந்து ரெட்ரோ வெல்ல அன்பு மட்டுமே காரணமாக இருந்தது. ரெட்ரோ குறித்த உண்மையான, ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான விமர்சனங்களுக்கும் மதிப்புரைகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி. அவை அனைத்தையும் நான் எனது அடுத்த படத்திற்கு எடுத்துச் செல்கிறேன். உங்களது மதிப்பு மிக்க விமர்சனங்கள் எனது அடுத்த படங்களில் எதிரொலிக்கும் என்பதற்கு உத்திரவாதம் தருகிறேன். ரெட்ரோ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த படம் மிகவும் ஸ்பெஷலான படமான இருக்கும். எனது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் எனது அன்புகள்” என பதிவிட்டுள்ளார்.

Share this story