வெப் சீரிஸுற்கு உருமாறிய ‘கோலி சோடா’

Goli soda

விஜய் மில்டன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான படம் கோலி சோடா. இயக்குநர் பாண்டிராஜ் வசனம் எழுதியிருந்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்தனர். அருணகிரி இப்படத்திற்குப் பாடல்கள் அமைத்திருக்க அனூப் என்பவர் பின்னணி இசையை கவனித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. 

இதில் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர்கள் இல்லாமல் புது நடிகர்கள் நடித்திருந்தனர். விஜய் மில்டனே இந்தப் படத்தையும் இயக்கியிருந்த நிலையில் கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரஃப்நோட் நிறுவனம் தயாரிப்பில் அச்சு ராஜா மணி இசையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்றது. 

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த பாகம் வெப் சீரிஸாக வெளியாகியுள்ளதாக தெரிகிறது. விஜய் மில்டன் இயக்கத்தில் ‘கோலி சோடா ரைசிங்’ என்ற தலைப்பில் ஒரு வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இதில் சேரன், ஷியாம், ரம்யா நம்பீசன், அபிராமி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது தொடர்பான ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட ஏழு மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சீரிஸின் கதை முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Share this story