100 கோடி வசூல் செய்த ஹாரர் காமெடி திரைப்படம்..!
'சு ஃப்ரம் சோ' (Su From So) திரைப்படம் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது. ராஜ் பி ஷெட்டி தயாரிப்பில், ஜே.பி. தும்மினாட் இயக்கத்தில் உருவான இந்த ஹாரர்-காமெடி திரைப்படம், எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி வெளியாகி, வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்துள்ளது. கடந்த ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியான 'சு ஃப்ரம் சோ', மூன்று நாட்களில் 7 கோடி ரூபாய் வசூலித்து, 3.80 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்துள்ளது.
ராஜ் பி ஷெட்டி, இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளராக இருப்பதோடு, ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
பிரபல இயக்குநரோ, தொழில்நுட்பக் கலைஞர்களோ இல்லாத போதிலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீ மேக் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையைச் சொல்லப்போனால், கே.ஜி.எஃப் 2 படத்திற்கு பின்னர் கன்னட திரையுலகில் மிகப்பெரிய வெற்றி என்பதே இல்லை எனக் கூறலாம். அதுவும் குறிப்பாக கடந்த இரு ஆண்டுகளாக கன்னடத் திரைப்படத் துறை தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், கன்னட திரையுலகமே பெரிய வெற்றிக்காக ஆவலுடன் காத்திருந்தது. அந்த வெற்றியை இளம் திறமையாளர்களால் உருவான 'சு ஃப்ரம் சோ' மூலம் சாத்தியமாகி உள்ளது.
கன்னடத் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைத்த 'சு ஃப்ரம் சோ' திரைப்படம் தற்போது 25 நாட்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. கடந்த 25 நாட்களாக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. முதல் மூன்று வாரங்களில் இப்படம் அபார வசூலைக் குவித்துள்ளது. குறிப்பாக வார நாட்களை விட வார இறுதி நாட்களில் 'சு ஃப்ரம் சோ' படத்தின் வசூலைக் கண்டு திரையுலகமே வியந்து போனது.
புதுமுகங்களை மட்டுமே கொண்ட இப்படம் ₹100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றிக்குப் பிறகு, Jio Hotstar படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றியது. ஆரம்பத்தில், செப்டம்பர் 5 அன்று OTT-யில் வெளியாகும் என அறிவித்து இருந்தாலும் நேற்று திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர் . ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 9, 2025 முதல் Hotstar டிஜிட்டல் தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

