IFFM திரைப்பட விழாவில் மகாராஜாவுக்கு அங்கீகாரம்.. விருதுகளின் முழு லிஸ்ட்!
70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2022 ஆம் ஆண்டு திரைப்படங்களுக்கு நேற்று டெல்லியில் வைத்து அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மலையாளம், கண்டனம் உள்ளிட்ட தென் இந்திய படங்கள் அதிக விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. இதற்கிடையில் மறுபுறம் ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் வைத்து இந்திய திரைப்பட விருது விழா நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15 தொடங்கிய இந்த விழா ஆகஸ்ட் 25 வரை நடைபெறும். இந்நிலையில் நேற்று சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்கு '12-த் ஃபெயில்' படம் தேர்வாகியுள்ளது .
ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மாவின் வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த இயக்குனருக்கான விருது விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் மற்றும் கார்த்திக் ஆர்யன் நடித்த சந்து சாம்பியன் படத்தின் இயக்குனர் கபீர் கான் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. எக்ஸலென்ஸ் இன் சினிமா [Excellence in Cinema] கவுரவ விருதுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தேர்வாகியுள்ளார். சிறந்த சீரிஸ் நடிகையாக 'போச்சர்' சீரிசில் நடித்த கேரள நடிகை நிமிஷா சஜயன் தேர்வாகியுள்ளார்.
இந்திய கலை மற்றும் கலாச்சாரத்துக்கான தூதுவராக தெலுங்கு நடிகர் ராம் சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகருக்கான விருது 'சந்து சாம்பியன்' படத்தில் ஹீரோ கார்த்திக் ஆரியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த நடிகைக்கான விருது 'உள்ளொளுக்கு' [ Ullozhukku ] படத்தில் நடித்த மலையாள நடிகை பார்வதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சீரிஸ் ஆக ' கோஹ்ரா' Kohrra [இந்தி] தேர்வு செய்யப்பட்டுள்ளது. விமர்சகர்கள் தேர்வில்[ Critics Choice] சிறந்த நடிகராக '12த் ஃபெயில்' நடிகர் விக்ராந்த் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். விமர்சகர்கள் தேர்வில்[ Critics Choice] சிறந்த படமாக 'லாபாட்டா லேடிஸ்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சமத்துவ சினிமாவாக [Equality in Cinema] ஷாருக் கான் நடிப்பில் ராஜ் குமார் ஹிராணி இயக்கத்தில் வெளிவந்த 'டன்கி' [Dunki] படம் தேர்வாகியுள்ளது. துணைக்கண்டத்தின் [இந்தியா] சிறந்த படமாக [Best Film from the Subcontinent] - 'தி ரெட் சூட்கேஸ்' படம் தேர்வாகியுள்ளது.பீபுள்ஸ் சாய்ஸ் படமாக [People's Choice] ஆலியா பட், ரன்வீர் சிங் நடித்த 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் [Rocky Aur Rani Kii Prem Kahaani] தேர்வாகியுள்ளது.