அட்லீ, முருகதாஸ் வரிசையில் பாலிவுட்டில் களமிறங்க தயாராகும் லோகேஷ் கனகராஜ்?
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாலிவுட் நடிகர் அமீர்கானை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, கைதி, மாஸ்டர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கி, பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். இதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம், லியோ ஆகிய படங்கள் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.
தனது படங்களின் கதை மூலம் marvel cinematic universe போல் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU) என்ற உலகத்தை உருவாக்கி அதில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை இணைத்து ஆச்சர்யப்படுத்தினார். குறிப்பாக விக்ரம் படத்தில் சர்ப்ரைஸாக இறுதியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவை கொண்டு வந்தது, லியோ படத்தில் கைதி டில்லி கதாபாத்திரமான கார்த்தி, மற்றும் விக்ரம் கதாபாத்திரமான கமல்ஹாசனை கொண்டு வந்தது என ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவாரம் செய்தனர்.இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஆரம்பத்திலேயே கூலி திரைப்படம் எல்சியுவில் இல்லை எனக்கூறி ரசிகர்களின் கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் முற்றுப்புள்ளி வைத்தார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் கூலி படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் சில மாதங்களுக்கு முன் வெளியான கூலி படத்தின் அறிவிப்பு வீடியோவில் இடம்பெற்ற டிஸ்கோ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் கூலி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, லோகேஷ் கனகராஜ் பாலிவுட் நடிகர் அமீர் கானை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் கூலி படத்தை முடித்துவிட்டு, தான் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக முன்பு லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகர் அமீர் கான் தற்போது இந்தியில் ‘Sitaare Zameen Par’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஜெனிலியாவும் நடித்து வரும் இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது. கடைசியாக அமீர் கான் நடித்த 'லால் சிங் சத்தா' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.