“30 வயசுக்கு மேல எல்லாமே டவுட்தான்”- 90s கிட்ஸ்களை தட்டி எழுப்பும் “லவ் மேரேஜ்” ட்ரெய்லர்

லவ் மேரேஜ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் லவ் மேரேஜ் திரைப்படம் குறித்தான ட்ரெய்லர் வெளியீடு நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 27ம் தேதி திரைக்கு வருகிறது. ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், “விக்ரம் பிரபுவுக்காக இங்கு வந்தேன். 90 கிட்ஸ் ரிப்ளக்ஷனாக இந்த படத்தை பார்க்கிறேன். படத்திற்கு முக்கிய வெற்றி டைட்டிலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. விக்ரம் பிரபு கடின உழைப்பாளி, முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த படமும் நன்றாக எல்லோரும் பிடிக்கும் வகையில் வந்துள்ளது. படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சண்முக பிரியன், “திரைப்பட இயக்குனராக வேண்டுமென்றால் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி உள்ளது. இந்த படத்தின் கதையை முதன் முதலில் படத்தின் ஹீரோ விக்ரம் பிரபுவிடம் முழுதாக சொல்லக்கூட என்னால் முடியவில்லை. பாதி கதையை ஸ்கிரிப்ட் ஆகதான் அவரிடம் கொடுத்தேன்.அவர் கதையை படித்து விட்டு என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடித்து கொடுத்துள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டு எந்த கருத்தும் நாங்கள் சொல்ல முன்வரவில்லை. படம் பார்த்து அவரவர் அதிலிருந்து தங்களது கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபு, “இந்த படம் எடுக்கும் போது முழுவதும் குடும்ப சுற்றுலா போல தான் இருந்தது. இதில் பணியாற்றிய அனைவரும் மிகுந்த அற்பணிப்பு உணர்வோடு பணியாற்றினர். படங்களில் கதாநாயகனுக்கு மட்டும் முக்கியத்துவம் இல்லாமல் அனைவருக்தும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பல விதமான படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உள்ளது” என்றார்.