இந்தியில் ரீமேக்காகும் மகாராஜா.. விஜய் சேதுபதி ரோலில் நடிப்பது யார் தெரியுமா?
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கஜானாவை நிரப்பிய மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ மேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் வெற்றிப்பெற்ற திரைப்படங்கள் இந்தியில் ரீமேக்காவது வழக்கமான ஒன்றாகும், அந்த வகையில், ராட்சசன், ஜிகர்தண்டா, சூரரை போற்று போன்ற படங்கள் ரீமேக்காகின அந்த வகையில், தற்போது மகாராஜா திரைப்படம் ரீமேக்காக உள்ளது.
மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தனது 50வது படமான மகாராஜாவில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார். மேலும், இதில், மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப் , அபிராமி, முனீஷ்காந்த், நட்டி நட்ராஜ் , பாரதிராஜா, சச்சினா நெமிதாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்து இருந்தார். ராம் முரல் மற்றும் நித்திலன் சுவாமிநாதன் இணைந்து எழுதி இருந்தனர்.
கோலிவுட்டில் இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்கள் வெளியான படங்களில் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 105 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலத்திலும் இப்படம் அற்புதமான வரவேற்பை பெற்றோடு மட்டுமில்லாமல் விஜய்சேதுபதியின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். கடந்த மாதம் தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
கோலிவுட்டில் பட்டையை கிளப்பிய மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ மேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் ஸ்டார் அமீர் கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமீர்கான் ஏற்கனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான கஜினி படத்தின் இந்தி ரீ-மேகில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார். தற்போது, மகாராஜா திரைப்படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிப்பதும் இவர்தான் என பாலிவுட் திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.