“படத்தின் ஆன்மாவே ரஹ்மானின் இசைதான்” - விருது வழங்காதது குறித்து இயக்குநர் அதிருப்தி
மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி, இயக்கத்தில் பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ஆடுஜீவிதம். இப்படம் மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இந்த நாவல் கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்பட்டு, பின்பு, அவர் எப்படி தப்பித்து கேரளா திரும்பினார் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது.
இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியானது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டினர்.
இந்த நிலையில் இப்படம் 54-ஆவது கேரள திரைப்பட விருதில் 9 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை தழுவல், சிறந்த ஒப்பனை கலைஞர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த கலரிஸ்ட், சிறந்த பிரபலமான திரைப்படம், சிறந்த நடிகர் (நடுவர் குழு தேர்வு) ஆகிய பிரிவுகளில் விருது வென்ற நிலையில் இசையமைப்பாளர் பிரிவில் விருது பெறவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் பிளெஸ்ஸி, சிறந்த இசைக்கான விருதிற்கு ஏ.ஆர் ரஹ்மான் தேர்வு செய்யாததது அவமானம் எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் பேசியதாவது, “இது எனது எட்டாவது திரைப்படம், இந்தப் படத்தின் ரீ-ரெக்கார்டிங்கின் போது ஏ.ஆர் ரஹ்மானின் சிறப்பான பங்களிப்பை பார்த்தேன். படத்தில் பயன்படுத்தப்பட்ட இசை பல்வேறு மொழிகளை வைத்து உருவாக்கப்பட்டது. ஆனால் சிறந்த இசைக்காக இந்தப் படம் பரிசீலிக்கப்படாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இதை உருவாக்க ஏ.ஆர் ரஹ்மான் உழைத்த வலியும், உழைப்பும் எனக்குத் தெரியும். அதை யார் செய்தார்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் இவ்வளவு பெரிய இசை, வெற்றியாளர் பட்டியலில் இருந்து விடுபட்டுவிட்டது. கேரளா முழுவதும் கொண்டாடப்பட்ட பாடல்கள் இடம்பெறாதது எப்படி என்பதுதான் என் கேள்வி? நான் புகார் செய்யவில்லை, வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார். மேலும், “ஆடு ஜீவிதம் படத்தின் ஆன்மாவாக இருந்தது இசை. அப்படி இருந்த ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கு விருதுகள் பரிசீலிக்கப்படாததை நான் அவமானமாக நினைக்கிறேன்” என்றார். கேரள திரைப்பட விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது சாவர் படத்திற்காக ஜஸ்டின் வர்கீஸுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.