சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனத்தை நீக்கினால் 'மனுஷி'க்கு சான்றிதழ்

மனுஷி படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்சார் போர்டு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, படத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என்பது குறித்து மனுதாரருக்கு தெரிவிக்கபட்டுள்ளதாகவும், அவற்றை நீக்கினால் சான்றிதழ் வழங்குவது குறித்து பரீசிலிக்கப்படும் என சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கபட்டது. வெற்றிமாறன் தரப்பில், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் தொடர்பாக சென்சார் போர்டின் தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்சார் போர்டு ஆட்சேபனையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யலாம் என பட தயாரிப்பாளர் வெற்றிமாறனுக்கு அனுமதியளித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.