இயக்குனர் சேகர் கம்முலா பெண் கதாபாத்திரங்களை சக்திவாய்ந்ததாக எழுதுகிறார் - சாய் பல்லவி பாராட்டு..!

1

தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்றோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பான் இந்தியா அளவில் வெளியாகியுள்ளது.

நேற்று இப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் படக்குழுவினரை வாழ்த்தி நடிகை சாய் பல்லவி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் கூறியுள்ளதாவது:-

குபேரா படம் சிறப்பான ஒரு படமாக இருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. தனுஷ் சாரின் மாஸ்டர்கிளாஸ் நடிப்பு , சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அதை எளிதாக திரையில் காண்பிக்கிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜுனாவை ஒரு கொலையாளி கதாபாத்திரத்தில் பார்ப்பது ஒரு விருந்தாக இருக்கும்

டியர் ராஷ்மிகா, சேகர் காரு தனது பெண் கதாபாத்திரங்களை எவ்வளவு சக்திவாய்ந்ததாகவும், தனித்துவமாகவும் எழுதுகிறார் என்பது நமக்குத் தெரியும். இது ரஷ்மிகாவுக்கு மறக்க முடியாத கதாபாத்திரமாக அமையும். ராக்ஸ்டார் டிஎஸ்பி அவர்களே, உங்களின் தொடர்ச்சியான வெற்றிப் படங்களின் வரிசையில் இந்தப்படமும் அமையும். உங்கள் தொகுப்பில் மற்றுமொரு இறக்காக இந்தப்படம் இருக்கும். .சூரி, அஜய், ஸ்வரூப், படக்குழு அனைவரின் ரத்தமும் வியர்வையும் பாராட்டுகளாக மாறும்.

ஏசியன் சினிமாஸும் பரிசுத்த இதயமான சேகர் கம்முலா சாரும் இணைவது மகத்தான கூட்டணியாக இருக்கும்.இந்தத் தலைமுறையின் உத்வேகம் நீங்கள் சேகர் கம்முலா சார். அதில் நானும் ஒருத்தி. எனது குரு மகிழ்ச்சியாகவும் உடல் நலத்துடனும் இதுபோல் பல கதைகளை எடுக்கவும் வாழ்த்துகிறேன். இன்று அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்க வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகை சாய் பல்லவி சேகர் கம்முலா இயக்கத்தில் பிடா, லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story