மறு ஆய்வு செய்யப்படவுள்ள ‘மனுசி’ திரைப்படம்!

மனுசி திரைப்படத்தை இன்று மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருப்பதாக, சென்சார் போர்டு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுசி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் படத்துக்கு சென்சார் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. இதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருப்பதாகவும், படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய தனது விண்ணப்பத்தின் மீது விரிவான உத்தரவை பிறப்பிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்சார் போர்டு தரப்பில் வழக்கறிஞர் குமரகுரு ஆஜராகி மனுஷி திரைப்படத்தை இன்று மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருப்பதாகவும், அதில் ஆட்சபேகரமான காட்சிகள் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதை ஏற்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுபாஷ் மோகன் அந்த காட்சிகளை நீக்கினால் என்ன சான்று வழங்கப்படும் என்ற முடிவை மறு ஆய்வு குழு தெரிவிக்கும். காட்சிகளை நீக்க மறுத்தால், சென்சார் போர்டு முடிவுக்கு அறிக்கை அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மறு ஆய்வு குழு படத்தை பார்த்து, அதன் முடிவுகளை மனுதாரருக்கு தெரிவித்தபின் வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறிய நீதிபதி, விசாரணையை ஜூன் 17 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.