கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்க சொல்லலாம்?- உச்சநீதிமன்றம் காட்டம்

thug life

கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் தக் லைஃப் படம் வெளியானது. இதில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் ரிலீஸ் ஆனதிலிருந்து கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவானது. கடந்த ஜூன் 5ஆம் தேதி பிற மொழிகளில் வெளியான கன்னட மொழி சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் மட்டும் வெளியிடப்படவில்லை. மற்ற நான்கு மொழிகளில் வெளியான நிலையில், வசூலிலும் இப்படம் கொஞ்சம் தடுமாறி வருகிறது. மணி ரத்தனத்தின் முந்தைய படங்களை போல் வசூலில் சாதனை செய்யவில்லை . மேலும் கமல் படங்களுக்கு இருக்கும் வசூல் இந்த படத்திற்கு இல்லை. 


இந்நிலையில் கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உரிய சான்றிதழ் பெற்ற பிறகு எந்த ஒரு படத்தையும் தடை செய்ய முடியாது எனக் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. படத்தை பார்த்து மக்கள் முடிவு செய்யட்டும் என்றும் கருத்து கூறினர். தக் லைப் திரைப்படத்திற்கு கர்நாடகாவில் விதித்த தடைக்கு எதிரான வழக்கில் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு விளக்கம் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது எனக் கூறிய உச்சநீதிமன்றம், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல, உயர்நீதிமன்றம் எப்படி, அப்படிக் கூறலாம்? என்றும் கண்டனம் கூறியுள்ளது.

Share this story