“தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதியுங்கள்”- கெஞ்சும் தயாரிப்பாளர் சங்கம்! மறுக்கும் கர்நாடக ஃபிலிம் சேம்பர்

தமிழ் மற்றும் கன்னட திரையுலகங்களுக்கு இடையிலான நல்லுறவை மதித்து, கமல்ஹாசனின் ‘தக் லைஃப்' திரைப்படத்தை ஜூன் 5ல் கர்நாடகாவில் தடையின்றி வெளியிட அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. நாளை மறுநாள் ( ஜூன் 5) இந்தப்படம் வெளியாக உள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற தக் லைஃப் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து பிரிந்தது தான் உங்கள் கன்னட மொழி’ என கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து கூறினார். கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. ஆனால் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோர நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதேவேளையில், கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்படுவதாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் மற்றும் கன்னட திரையுலகங்களுக்கு இடையிலான நல்லுறவை மதித்து, கமல்ஹாசனின் ‘தக் லைஃப்' திரைப்படத்தை ஜூன் 5ல் கர்நாடகாவில் தடையின்றி வெளியிட அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. கமலின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது, சமரச உணர்வோடு அணுக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. அதேசமயம் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட விரும்புவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியுள்ளது. அச்சபையின் தலைவர் நரசிம்மலு, கர்நாடகாவில் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிகளவு உள்ளனர், பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். விரைவாக பிரச்சனையை பேசி முடித்து படத்தை வெளியிடுவதற்கான வழியைப் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். ஆனால் கமல் மன்னிப்பு கேட்டால் மட்டும்தான் கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் ஆகும், கமல் எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வரும்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என கர்நாடக ஃபிலிம் சேம்பர் திட்டவட்டமாக கூறியுள்ளது.
-