“கிடைப்பதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க, இதுவொன்றும் ஓய்வூதியமல்”- நடிகை ஊர்வசி காட்டம்
கதாநாயகராக நடிப்பதற்கு துணை நடிகருக்கான விருதுகளை வழங்கிவிட்டால் துணை நடிகராக நடிப்பவர்களுக்கு விருது எப்படி கிடைக்கும் என நடிகை ஊர்வசி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் 71வது தேசிய விருது பட்டியல் வெளியானது. அதில் சிறந்த துணை நடிகைக்கான விருது “உல்லொலுக்கு” என்ற திரைப்படத்திற்காக ஊர்வசிக்கு வழங்கப்பட்டது. இதற்கு மகிழ்ச்சி அடையாமல் கோபமடைந்துள்ள ஊர்வசி, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், “என்னை விருதுக்கு தேர்வு செய்ததற்கு நன்றி. ஆனால் ஒரு விருது எதற்காக, எதன் அடிப்படையில் அளிக்கப்படுகிறது? ஆடுஜீவிதம் படம் கண்டுகொள்ளப்படாமலே போயுள்ளது. தமிழில் ஜே பேபி படம் சிறந்த நடிகைக்காக போயிருந்தது, ஆனால் அதை பார்க்கக் கூட யாருமில்லை. பல சிரமங்களை கடந்து பூக்காலம் படத்தில் நடித்த விஜய ராகவனின் நடிப்பையும், ஜவானில் ஷாரூக்கான் நடிப்பையும் என்ன அடிப்படையில் கணக்கிட்டு, அவர் சிறந்த துணை நடிகர், இவர் சிறந்த நடிகர் என்றனர்? நாங்களும் வரி செலுத்துகிறோம், மற்றவர்களைப் போலவே எங்கள் வேலைகளைச் செய்கிறோம். கிடைப்பதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க, இதுவொன்றும் ஓய்வூதியமல்ல. எங்கள் வேலைக்கான அங்கீகாரம்.
நடிப்புகென்று ஏதேனும் தர நிலைகள் உள்ளனவா? இந்த முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? ஏன் எனக்கும் விஜயராகவனுக்கும் சிறந்த நடிகர்களுக்கான விருது வழங்கப்படவில்லை? நாங்கள் பாடுபட்டு நடிக்கிறோம். அரசு தருவதை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என சொல்வது சரியல்ல” என்றார்.

