“நாங்கள் சட்டத்தை மீறவில்லை” - நீதிமன்றம் செல்லும் நாகர்ஜூனா...!

Nagarjuna

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) என்கிற அமைப்பு கடந்த ஜூலை 17-ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நீர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளதாக வரும் புகாரின் அடிப்படையில் அக்கட்டடத்தை இடித்து வருகிறது. 

அந்த வகையில் பிரபல நடிகர் நாகர்ஜூனா தம்மிடிகுண்டா ஏரிக்கு அருகில் மிகப்பிரம்மாண்டமாகக் கட்டியுள்ள கன்வென்ஷன் சென்டர், கிட்டத்தட்ட 4 ஏக்கர் பரப்பளவில் ஏரியை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாகவும், மழை பெய்யும் போது மழை நீர் வடிகால் தடைபட்டு அப்பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் பேரில் தற்போது ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அந்த கட்டடத்தை இடித்துள்ளனர். 

 

null


நாகர்ஜூனா கட்டிய கன்வென்ஷன் சென்டர் பல கோடி ரூபாயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது. அப்பகுதியில் பெரும் அடையாளமாகக் காணப்பட்ட அந்த கட்டடம் தற்போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகர்ஜூனா தற்போது இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது கட்டடத்தை இடிக்க நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கப்பட்டுள்ள நிலையில் இதனை இடித்துள்ளனர். நாங்கள் சட்டத்தை மீறவில்லை.

இந்த இடம் பட்டா செய்யப்பட்ட நிலம். ஒரு இன்ச் கூட ஆக்கிரமித்துக் கட்டவில்லை. இது தொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட சட்டவிரோத நோட்டீஸ்க்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தவறான தகவலின் அடிப்படையில் இந்த இடிப்பு நடந்துள்ளது. இடிப்பதற்கு முன் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நான் தொடரப்பட்ட வழக்கில் எனக்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே கட்டடத்தை இடித்திருப்பேன். அதிகாரிகளால் தவறாக இடித்துத் தள்ளப்பட்ட எனது கட்டடத்திற்கு சரியான நிவாரணம் வேண்டி நீதிமன்றத்திடம் முறையிடவுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார். 

Share this story