த்ரிஷ்யம் மூன்றாம் பாகம் உருவாகுமா!? தயாரிப்பாளரின் பதில்!
த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் பற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார்.
2013-ம் ஆண்டு இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு அவைகளும் ஹிட் அடித்தன. சிங்கள மொழி, மற்றும் சீனாவில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் என்ற பெருமையும் இப்படத்திற்குக் கிடைத்தது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்குப் பிறகு தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் வெற்றியடைந்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மோகன்லாலின் தரமான செய்கை… சிறப்பான இரண்டாம் பாகம்… த்ரிஷ்யம் 2 விமர்சனம்!
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட த்ரிஷ்யம் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி, ” நான் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் சமீபத்தில் பேசினேன், திரிஷ்யம் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் திட்டம் இருப்பது எனக்கு தெரியவந்தது. எனவே திரிஷ்யம் மூன்றாம் பாகம் உருவாகும் என்று நானும் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் த்ரிஷ்யம் இரண்டாம் பாகம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது தெலுங்கில் த்ரிஷ்யம் 2 ரீமேக் ஆவது உருத்தியாகியுள்ளது. தமிழில் ரீமேக் ஆகுமா என்பது குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.