8 ஆண்டு சட்ட போராட்டம்.. முடிவுக்கு வந்த ஏஞ்சலினா ஜோலி வழக்கு...!
உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, இன்னொரு ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டை காதலித்து 2005 முதல் அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல்(லிவ் இன் ரிலேஷன்ஷிப்) வாழ்ந்து வந்தார். பின்பு 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மேலும் போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
இதையடுத்து 2016ஆம் ஏஞ்சலினா ஜோலி பிராட் பிட்டிடம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பிராட் பிட் தனியார் ஜெட் விமானத்தில் தன்னிடமும் தனது குழந்தைகளிடமும் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக பிராட் பிட்டிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.
இந்த விவாகரத்து வழக்கு அவர்களது குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து நடந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று கொண்டதாக ஏஞ்சலினா ஜோலியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எட்டு ஆண்டுகளுக்கு முன்னாடி ஏஞ்சலினா ஜோலி பிராட் பிட்டிடம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அவரும் அவரது குழந்தைகளும் பிராட் பிட்டுடன் பகிர்ந்து கொண்ட அனைத்து சொத்துகளையும் விட்டுவிட்டார்கள். அப்போதில் இருந்து ஏஞ்சலினா அமைதியை நோக்கி பயணித்தார். இப்போது அவர் நிம்மதியாக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.