‘த்ரிஷ்யம் 2’ கதையை முடிக்க 5 வருடங்கள் ஆனது… மனம் திறந்த இயக்குனர்!
த்ரிஷ்யம் 2 படத்தின் கதையை எழுதி முடிக்க 5 வருடங்கள் ஆனது என்று அப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டு இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தன் குடும்பத்தைக் காக்க போராடும் ஜார்ஜ் குட்டியின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று பார்க்கும் அனைவர்க்கும் நினைக்கும் படி நேர்த்தியான திரைக்கதை எழுதியிருந்தார் இயக்குனர். பின்பு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் த்ரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு அவைகளும் ஹிட் அடித்தன.
முதல் பாகம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இந்திய அளவில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தற்போது படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் ஜீத்து ஜோசப் தனக்கு த்ரிஷ்யம் 2 படத்தின் கதையை இறுதி செய்ய 5 வருடங்கள் ஆனது என்று தெரிவித்துள்ளார். “எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் என அனைவரும் கதை நன்றாக உள்ளது என்று கூறிய பின்னரே படம் முன்னோக்கி சென்றது.” என்றும் தெரிவித்துள்ளார்.
த்ரிஷ்யம் 2 படம் பிப்ரவரி 19-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.