'வீர தீர சூரன்' படத்தில் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி : இயக்குநர் அருண்குமார்!

vikram

வீர தீர சூரன்’ திரைப்படத்தில் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி இடம்பெற்றுள்ளதாக இயக்குநர் அருண்குமார் கூறியுள்ளார். அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'வீர தீர சூரன்'. விக்ரமின் ஆக்‌ஷன் அவதாரத்தில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

விக்ரம் முழு ஆக்‌ஷன் படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆன நிலையில், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் அருண்குமார் விக்ரமுடன் கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முற்றிலும் வித்தியாசமாக இப்படத்தின் முதல் பாகத்திற்கு பதிலாக இரண்டாம் பாகம் தற்போது வெளியாகிறது. இப்படத்தின் டீசர் யூடியூபில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

அதேபோல் இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டும் இடம்பெறும் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். முன்னதாக வீர தீர சூரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கியது குறித்து இயக்குநரை எஸ்.ஜே.சூர்யா பாராட்டி பதிவிட்டிருந்தார். இந்நிலையில் வீர தீர சூரன் திரைப்படம் வரும் ஜனவரி மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் அருண்குமார் நேர்காணலில் பேசியுள்ளார்.


அவர் பேசுகையில், “வீர தீர சூரன் படத்திற்கு நிறைய முன்கதைகள் உள்ளது. ஒரு இரவில் நடக்கும் கதை தான் இப்படம். வீர தீர சூரன் படத்தை ஜானராக கேட்டால் ஆக்‌ஷன் த்ரில்லர் என கூறுவேன். மேலும் இப்படம் வன்முறை, மன்னிப்பு, குற்றவுணர்ச்சி ஆகியவை குறித்து பேசும்” என கூறியுள்ளார்.


படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் ஷாட் காட்சி குறித்து இயக்குநர் அருண்குமார் பேசுகையில், “ஒரு 15 நிமிட சிங்கிள் ஷாட் எடுத்துள்ளோம், அது மிகவும் சவாலாக இருந்தது. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் செட் போடுவதற்கு முன்பாக படக்குழுவை சேர்ந்த சண்டை கலைஞர்கள், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைவரும் சென்று ஒத்திகை பார்த்தோம். பிறகு செட் போட்ட பிறகு நடிகர்களை வைத்து சிங்கிள் ஷாட் காட்சியை படமாக்கினோம். அந்த காட்சிக்கு சிங்கிள் ஷாட் தேவைப்பட்டதால் எடுத்தோம். ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒத்துழைப்பு அளித்ததால் சிங்கிள் ஷாட் காட்சியை உருவாக்க முடிந்தது” என கூறியுள்ளார்.

Share this story