"2016.. அதே நாள்.." இயக்குனர் சுதா கொங்கரா நெகிழ்ச்சி..

sudha

சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 25வது படத்தை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரவி மோகன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையில் அவரது நூறாவது படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

 sk
இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று ஜனவரி 29ஆம் தேதி வெளியானது. படத்திற்கு பராசக்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கலைஞர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதி சிவாஜி நடித்த பராசக்தி படம் பெரும் ஹிட்டடித்ததால் அதே தலைப்பு இப்படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் அதிகரித்துள்ளது. மேலும் டைட்டில் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில் டைட்டில் டீசருக்கு கிடைத்த வரவேற்பு குறித்து சுதா கொங்கரா நெகிழ்ச்சியுடன் பலருக்கு நன்றி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கம் வாயிலாக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள அவர், அந்த பதிவில், “2016 ஆம் ஆண்டு, நேற்றுப் போலவே, ஜனவரி 29 ஆம் தேதி பார்வையாளர்களும் ஊடகங்களும் எனக்கு மிகவும் மதிப்புமிக்க ஒன்றை கொடுத்தனர். இறுதி சுற்று படத்தால் என்னை ஏற்றுக்கொண்டனர். அதன் மூலம் நீங்கள் என் வாழ்க்கையை மாற்றியமைத்தீர்கள். இந்த ஆண்டும் அதே நாளில் மீண்டும் அந்த அன்பை எதிர்பார்த்தேன். பராசக்தி பட அறிவிப்பு வீடியோ மூலம் அது கிடைத்துள்ளது. அதை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். 



 
மேலும் படத்தை சுற்றி பேசப்படும் உரையாடலையும் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக படக்குழு சார்பில் என் இதயத்தில் இருந்து நன்றி கூறுகிறேன். இது இதுவரை மிகவும் முக்கியமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணமாக இருந்து வருகிறது. எனது உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. என்னுடைய சிறந்த படங்களை விட பராசக்தி படத்தை குறைவானதாக கொடுத்துவிடக்கூடாது என்கிற நன்றியும் பயமும்தான் அது” எனக் குறிப்பிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பராசக்தி தலைப்பை வழங்கியதற்காக ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்து படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். 

Share this story