நாளை வௌியாகும் 3 திரைப்படங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை ஒரே நாளில் 3 திரைப்படங்கள் வெளியாகின்றன. கார்த்தியின் ஜப்பான், ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் விக்ரம் பிரபு நடித்துள்ள ரைடு ஆகிய படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகின்றன.
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜப்பான். ராஜூ முருகன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். கார்த்தியின் 25வது படமான இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். மேலும் விஜய் மில்டன், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹெய்ஸ்ட் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படமானது நாளை வெளியாகிறது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ஜிகர்தண்டா. இப்படத்தில் நடித்தற்காக பாபி சிம்ஹா தேசிய விருதும் பெற்றார். அப்பொழுது முதலே படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஜிகர்தண்டா டபுல் எக்ஸ் என்னும் பெயரில் இரண்டாம் பாகம் வரும் தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதுமையான கதைக்களத்தில் தயாராகி வருகிறது. முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இத்திரைப்படமும் நாளை வெளியாகிறது.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ரைடு. இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு தவிர, அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.