‘சின்னத்தம்பி’ வெளியாகி 32 ஆண்டுகள்... நினைவை பகிர்ந்த நடிகை குஷ்பூ !

ChinnaThambi

குஷ்பூவின் சூப்பர் ஹிட் படமான சின்னத்தம்பி வெளியாகி 32 ஆனதை, அவர் நினைவு கூர்ந்துள்ளார். 

கடந்த 1991-ஆம் ஆண்டு முன்னணி இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘சின்னத்தம்பி’. இந்த படத்தில் நடிகர் பிரபு, நடிகை குஷ்பூ, மனோரமா, ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். 

ChinnaThambi

நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பூவின் கெரியரையே மாற்றிய படமாக இப்படம் அமைந்தது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குடும்ப குடும்பமாய் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்து மகிழ்ந்தனர். இந்த படம் வெளியாகி 45-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாள் ஓடியது. மேலும் ஒரு வருடத்திற்கு மேல் 9 திரையரங்கில் ஓடியது. இன்றைக்கும் ரசிகர்கள் நெஞ்சில் நிலைத்து நின்றுக் கொண்டிருக்கிறது ‘சின்னத்தம்பி’. 

இந்நிலையில் இந்த படம் வெளியாகி 32 ஆண்டுகள் கடந்துள்ளது. இதை நினைவுக்கூறும் வகையில் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சின்னத்தம்பி வெளியாகி 32 ஆண்டு ஆகிவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. என் மீது அன்பு செலுத்திய மக்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். வாசு சார் மற்றும் பிரபு சாருக்காக என் இதயம் எப்போதுமே துடிக்கும். இந்த படத்திற்காக சிறந்த இசையை கொடுத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், மறைந்த தயாரிப்பாளர் கே.பாலு ஆகியோருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.   

 


 

 

Share this story