நாளை 5 படங்கள் ரிலீஸ்.. எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமா ‘குபேரா’? களத்தில் மோதும் அதர்வா-வின் ‘டிஎன்ஏ’..!!

கோலிவுட்டில் நாளை மூன்று தமிழ் படங்களும், ஒரு இந்தி மற்றும் ஆங்கில படம் என 5 திரைப்படங்கள் வெளியாகிறது!
கோலிவுட்டில் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்களை ரீலீஸ் செய்வதை ஒரு சென்டிமென்டாகவே பின்பற்றி வருகின்றனர். சினிமா பொதுவாகவே மக்களிடம் ஊறிப்போன ஒன்று. புதிய கதையை தேடுபவர்கள், இயக்குநருக்காக அல்லது தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக படம் பார்ப்பவர்கள், பாடல்களுக்காக சினிமா பிடிக்கும் என்பவர்கள், குடும்பக் கதைகளை விரும்புபவர்கள், ஆக்ஷன், கிரைம், திரில்லர் கதைகள் பிடித்தவர்கள் என சினிமாவுக்கு தனித்தனியே ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி காத்துக்கிடக்கும் ரசிகர்களுக்கு தீனி போடவே வாரவாரம் வெள்ளிக்கிழமைகளில் படங்கள் ரிலீஸாகி வருகின்றனர்.
அந்தவகையில் இந்தவாரம் நாளை (ஜூன் 20) தனுஷின் ‘குபேரா’, அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’,வைபவின் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’, பாலிவுட் நடிகர் ஆமிர்கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’, அனிமேஷன் திரைப்படமான ‘எலியோ’ ஆகிய 5 படங்கள் நாளை திரைக்கு வருகிறது!
இதில் ‘குபேரா’ பிரபல தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம். இந்தப்படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தானா , அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். தனுஷின் 51வது படமான ‘குபேரா’வில்தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது.
‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம் ‘டி.என்.ஏ’. இந்தப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா விஜயன், ரமேஷ் திலக், போஸ் வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘டிஎன்ஏ’ படத்திற்கு ஜிப்ரான் பின்னணி இசையை வழங்கியுள்ளார். அதேநேரம் படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுக்கு, சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சைவி, சஹி சிவா மற்றும் அனல் ஆகாஷ் ஆகிய ஐந்து வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். படத்திற்கான பிரீமியர் காட்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவுகிறது.
விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேஷவ் ஆகிய இரண்டு இயக்குநர்களின் கூட்டு இயக்கத்தில் முழு காமெடி திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’. வைபவ், அதுல்யா ரவி மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரெடின், மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் காமெடி படமாக இது அமைந்துள்ளதால், ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. ஆர். எஸ். பிரசன்னா இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஜெனிலியா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமஸ் மிஸ்ரா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தியில் உருவான இந்தப்படம் தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்சியாளராக நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் ஆமீர் கான், அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாகச் சொல்வதே இந்தப்படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.
இந்தப்படங்களின் வரிசையில் குழந்தைகளை கவரும் விதமாக டிஸ்னியின் ‘எலியோ’ என்ற ஆங்கில அனிமேஷன் திரைப்படமும் நாளை திரைக்கு வருகிறது. 3Dயில் உருவாகியுள்ள இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.