உலக தரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

arrr

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். 

பொதுவாகவே, ஏ.ஆர்.ஆர்-க்கு தமிழ்நாட்டின் மீது, தாய் மொழி மீதும் அதீத காதல் என்றே சொல்லலாம். காரணம் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், எனது அம்மாவை நான் மதர் என அழைப்பதில்லை. அம்மா என்று தான் அழைப்பேன் என மிகவும் கர்வமாக கூறினார். அதேபோல் ஆஸ்கர் விருதுவழங்கும் மேடையில், அத்துணை வெளிநாட்டு பிரபலங்கள் முன்னிலையில்  ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என தமிழில் முழக்கமிட்டார். இதேபோல் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு பிரச்னை நிலவியபோது, 
தமிழன்னை ‘ழ’ எனும் வேலை கையில் ஏந்தியபடி இருக்கும் தமிழணங்கு எனும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மொழிப்பற்றை நிரூபித்தார். 


இந்நிலையில், தனது பிறந்தநாளான இன்று ஏ.ஆர்.ரஹ்மான், “கற்றார்” எனும் புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்துள்ளார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் பிளாட்ஃபார்ம் ஆகும். இதன்மூலம் கலைஞர்கள், தங்களின் படைப்புகளை பட்டியலிட முடியும். அதாவது கலைஞர்களின் இசை உள்ளிட்ட கலைகள் நேரடியாக “கற்றார்” தளத்தில் பதிவிடப்படும். ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார். பயனர்களும் இந்த தளத்தை, தங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ மற்றும் பிற வகையான டிஜிட்டல் கோப்புகள் போன்ற பொருட்களைப் பிரதிநிதித்துவப்படுத்த பயன்படுத்தப்படலாம். 

 

விரைவில் சர்வதேச தரத்திலான படைப்புகள் இந்த தளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. HBAR என்ற அறக்கட்டளையுடன் இணைந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இணையதளத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது யூடியூப் பக்கத்தின்வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளார். தனது தமிழ்ப்பற்றை விளக்கும் விதமாக கற்றார் எனும் தமிழ் பெயரையே சர்வதேச டிஜிட்டல் பிளாட்ஃபார்முக்கு வைத்து அசத்தியுள்ளார் ஏ.ஆர்.ஆர். 
 
“கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்”
எனும் திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாய், கற்றவரின் முன் தாம் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்ல வல்லவர் கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்து செல்லப்படுபவராக ஏ.ஆர்.ரஹ்மான் விளங்குவது குறிப்பிடதக்கது.

Share this story