ராதிகா மெர்ச்சன்ட்டை மணக்கிறார் ஆனந்த் அம்பானி

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ஷைலா - வீரேன் மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நாததுவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்வில், குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். கடந்த சில ஆண்டுகளாகவே ஆனந்த் மற்றும் ராதிகா பழகி வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் சம்மத்துடன், நண்பர்களின் முன்னிலையில் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வீரேன் மெர்ச்சன்ட், ஒரு மருந்து தயாரி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ராதிகா மெர்ச்சன்ட், என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக பணியாற்றிவருகிறார். இதேபோல் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராக உள்ளார். மேலும் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்- இன் எரிசக்தி வணிகத்தையும் வழிநடத்துகிறார்.