அஜித்தை அடுத்து பிரபல நடிகரை இயக்கும் எச்.வினோத்... புதிய தகவல் !
‘வலிமை’ படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கும் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் உருவாகி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘வலிமை’. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார். இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. மூன்றாவது நாளான இன்று 100 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக அஜித்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். பாலிவுட் இயக்குனர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே வெளியான செய்தி. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த மாதம் படப்பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அஜித்தின் 61வது படமாக உருவாகும் இந்த படத்தை ஆண்டு இறுதிக்குள் முடித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எச்.வினோத்தின் அடுத்த படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் சேதுபதியை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், போனி கபூர்தான் தயாரிப்பாளர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

