"2 வரிகள் பேசவே 98% ஜிஎஸ்டி ... " - இயக்குநரின் பாராட்டால் சிலாகிக்கும் சின்ன பழுவேட்டரையர்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் படமாக்கி அதை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்துள்ளார். இன்று உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் தமிழர்களின் பொற்கால ஆட்சி என்று சொல்லப்படும் ராஜராஜ சோழனின் ஆட்சி நடப்பதற்கே முக்கியமாக காரணமாக அமைந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் கதை உருவாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ் , ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் , ஜெயராம் ,பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு ,விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தஞ்சாவூருக்கு சென்று ரசிகர்களுடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கண்டு ரசித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு பெரிய கோவில் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். இந்நிலையில் பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மணிரத்தினம் அவரை பாராட்டியதை குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வரிகள் பேசவே 98 சதவீதம் ஜிஎஸ்டி வரி போடும் மனிதரிடமிருந்து 5.2 வரிகள் பாராட்டு -பாரே சீழக்கை அடிப்பது போல் உள்ளது என்று குறிப்பிட்டு சிலாகித்துள்ளார்.