திரைப்படமானது ‘காடுவெட்டி’ குருவின் வாழ்க்கை… படத்தின் டீசர் வெளியீடு !
மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வன்னியர் இன மக்களிடையே மிகவும் செல்வாக்குடன் இருந்தவர் காடுவெட்டி குரு. தனது இன மக்களுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்தவர். மாவீரன் என்று மக்களால் அழைக்கப்பட்ட குரு, பல சமூக சீர்திருத்தங்களை செய்துள்ளார். எதையும் எதிர்க்கும் துணிச்சல் மிக்கவராக இருந்த குரு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் மரணமடைந்தார்.

இதையடுத்து காடுவெட்டி குருவின் வீரமிக்க வாழ்க்கை வரலாறு ‘காடுவெட்டி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் காடுவெட்டி குருவின் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். சோலை ஆறுமுகம் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்தில் ஆர்.கே. சுரேஷ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு வசனங்கள் ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

