வாழ்க்கையே ஒரு டேக் டைவர்ஷன் தான், அதனால் கிடைக்கும் பொக்கிஷம் ஏராளம்... இயக்குனர் ஷிவானி செந்தில்!
கார்கில் படத்தின் இயக்குனர் ஷிவானி செந்தில் இயக்கத்தில் 'டேக் டைவர்சன்' என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் 70’ஸ் கிட்ஸ், 90-ஸ் கிட்ஸ் மற்றும் 2K- கிட்ஸ்களின் வாழ்க்கையை விவரிக்கும் புதிய படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கேஜிஎஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார்.

ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
விரைவில் வெளியாகவிருக்கும் 'டேக் டைவர்ஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குநர் பேரரசு, இயக்குநர் 'எத்தன்' சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஷிவானி செந்தில் பேசுகையில்,
''நேராகப் பயணிக்க வேண்டிய பயணத்தில் டேக் டைவர்ஷன் இருந்தால் ஒரு மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டியிருக்கும். முதலில் தயக்கம் இருந்தாலும், டென்ஷன் ஏற்பட்டாலும், பயணித்தால்... சென்றடைய வேண்டிய இலக்கு நல்லதாகவே இருக்கும். இந்தத் திரைப்படத்தில் உங்களுக்கு டேக் டைவர்ஷன் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் டென்ஷனைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பதை மையப்படுத்தி இருக்கிறேன். வாழ்க்கையே ஒரு டேக் டைவர்ஷன் தான். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டதைப் போல் டேக் டைவர்ஷனால் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் ஏராளம். இந்தப்படத்திலும் டென்ஷனை ஏற்றுக்கொண்டு டேக் டைவர்ஷனில் பயணித்தால் நமக்கும் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்பதைச் சுவராசியமாக சொல்லி இருக்கிறேன்.

ஒரே நாளில் நடைபெறும் கதை. அதிலும் பயணம் தொடர்பான கதை என்பதால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய நடிகர், நடிகைகளுக்கும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சினிமாவில் சாதிக்க ஆசைப்படுவேன். அதனை கடவுள் வெவ்வேறு நண்பர்களின் ரூபத்தில் நிறைவேற்றி வைப்பார்; வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லரை நாயகன் சிவகுமார் மூலமாக கே ஜி எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களும் இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது எனப் பாராட்டினார். இது போன்ற பாராட்டுகள் என்னை உற்சாகமடைய வைத்திருக்கின்றன.

என்னைப் பொறுத்தவரை ஒரு கனவு நனவாக வேண்டும் என்றால், உழைப்பு மட்டும் போதாது. மக்களின் கைகளில்தான் இருக்கிறது. டேக் டைவர்ஷன் படைப்பை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். என்னுடைய கனவிற்கும் நிஜத்திற்கும் இடையில் இருப்பவர்கள் மக்கள். அதனால் அவர்களின் ஆதரவை வேண்டுகிறேன்.'' என்றார்.

