சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ குறித்து பரவும் தவறான செய்தி... முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் !

Maaveeran

சிவகார்த்திகேயனின் மாவீரன் குறித்து பரவும் தவறான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Maaveeran

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 40 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளில் திருப்தியில்லை என குற்றச்சாட்டி நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை நிறுத்திய தகவல் வெளியானது. 

இதையடுத்து சிவகார்த்திகேயனிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. சில நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுக்கு உடன்பாடு இல்லை என கூறப்பட்டது. அதனால் புதிய கதையில் மாவீரன் உருவாகயிருப்பதாக தகவல்கள் கசிந்தன. 

Maaveeran

இந்நிலையில் ‘மாவீரன்’ குறித்து வெளியாகும் தவறான செய்திக்கு பட தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாவீரன்’ படம் குறித்து ஆதாரமற்ற வதந்திகளும், பொய்யான செய்திகளும் தொடர்ந்து பரவி வருகிறது. அவற்றை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் எதிர்பார்க்காத வகையில் புதியதொரு அனுபவத்தை தர ‘மாவீரன்’ படக்குழு உழைத்துக் கொண்டிருக்கிறது. 

மேலும் ‘வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்ற திருக்குறள் ஒன்றையும் மேற்கோள் காட்டியுள்ளது. இதன் அர்த்தம் என்னவெனில், வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்களுக்கு ஒரு சிறுதும் தீங்கு இல்லாத சொற்களை சொல்லுதல் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.


 

 

Share this story