மிகப்பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது - உடல்நிலை குறித்து விளக்கமளித்த விஜய் ஆண்டனி

Pichaikkaran 2

தனக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

‘பிச்சைக்காரன் 2’ படத்தை நடிகர் விஜய் ஆண்டனி தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் காவ்யா தாப்பர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று மலேசிய நாட்டில் உள்ள லங்கா தீவில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி படமாக்கப்பட்டு வந்தது. அதில் கதாநாயகி காவ்யா தாப்பருடன் கடலில் ஜெட் ஸ்கை ஓட்டுவது போன்று காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது.  

Pichaikkaran 2

அப்போது எதிர்பார்க்காத விதமாக விஜய் ஆண்டனியின் ஜெட் ஸ்கை, மற்றொரு ஜெட் ஸ்கை மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் முகத்தில் அதிகமாக காயம் ஏற்பட்டது. இதுதவிர உதடு மற்றும் பற்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் உடனிருந்த நடிகை காவ்யா தாப்பர் எந்த காயமின்றி தப்பினார். 

Pichaikkaran 2

இதையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட விஜய் ஆண்டனி, சிகிச்சையில் இருப்பதாகவும், இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தனது உடல் நிலை குறித்து நடிகர் விஜய் ஆண்டனி, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மலேசியாவில் நடைபெற்ற ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட பலத்த காயத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளேன். கொஞ்ச நேரத்திற்கு முன்னர் தான் ஒரு பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. உங்கள் அனைவரிடமும் கூடிய விரைவில் பேசுவேன். என் உடல் நலனில் அக்கறை காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.  விஜய் ஆண்டனி விரைவில் நலம்பெற ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


 

Share this story