முத்தையாவுடன் கூட்டணி அமைக்கும் விஷால்... மீண்டும் இணையும் ‘மருது’ கூட்டணி ?
முத்தையா இயக்கத்தில் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு முதத்தையா நடிப்பில் விஷால் நடித்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘மருது’. விஷால் முரட்டுத்தனமான கிராமத்து நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து ஸ்ரீவித்யா, சூர்யா, ஆர்.கே.சுரேஷ், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்த படத்திற்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. தொடர்ந்து நகரத்து கதைக்களங்களில் நடித்து வரும் விஷால், மீண்டும் கிராமத்து இளைஞனாக மாறவுள்ளார்.

கடந்த சில வருடங்களாக விஷால் நடிப்பில் வெளியாகி வரும் திரைப்படங்கள் வெற்றிப்பெறாத நிலையில் இந்த வெற்றிக்கூட்டணியில் விஷால் இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரமே வாகை சூடும்’ நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மூலம் வெற்றியை கண்டிப்பாக பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் விஷால் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

