Work Mode On.. இளையராஜாவுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்திப்பு.. வைரலாகும் ஃபோட்டோஸ்...
புதிய படம் ஒன்றை இயக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜாவை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், நடிகர் தனுஷும் அண்மையில் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ள நிலையில், பிள்ளைகளுக்காக இருவரும் இணைந்து வாழ வேண்டும் என பல பிரபலங்கள் சமாதானம் பேச முயன்றும் பயனளிக்கவில்லை. இந்தப் பிரபலங்களின் விவாகரத்தும் விஷயம் நீண்ட நாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து இல்லற வாழ்க்கை கசப்பை தகர்த்தெறிய ஐஸ்வர்யா திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார்.
முன்னதாக தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘3’ மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ ஆகிய படங்களை ஐஸ்வர்யா இயக்கியிருக்கிறார். விவாகரத்துக்குப் பின்னர் சினிமா பணிகளில் அதிக கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யாவின், பயணி (முசாஃபிர்) என்ற ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு பாலிவுட்டில் களமிறங்கியிருக்கும் ஐஸ்வர்யா, புதிய படமொன்றை இயக்க உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஓ சாத்தி சால்’ எனும் படத்தை அவர் இயக்க இருக்கிறார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட காதல் கதை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா, இசைஞானி இளையராஜாவை திடீரென சந்தித்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஓரு அறையில் இளையராஜா ஆர்மோனியம் வாசிப்பது போன்றும், அதனை ஐஸ்வர்யா கேட்பது போன்றும் உள்ளது. அத்துடன், என்னுடைய திங்கள் கிழமை இதைவிட மேஜிக்கலாகவும், மியூசிக்கலாகவும் இருக்க முடியாது என்றும், இளையராஜா அங்கிளோடு நேரம் செலவிடுவது எப்போது மகிழ்ச்சியான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மொர்க் மோட் ஆன் என்றும் பதிவிட்டுள்ளார். இதனால் ஐஸ்வர்யா இயக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளாரோ என ரசிகரகள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.