ஹாரர் த்ரில்லர் படத்தில் யாஷிகா... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

நடிகை யாஷிகா நடித்துள்ள ஹாரர் த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையே சாலை விபத்து ஒன்றில் சிக்கிய யாஷிகா, சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து தொடர்ந்து கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் புதிய ஹாரர் படத்தில் நடிகை யாஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜெனித்குமார் என்பவர் இயக்கியுள்ளார். அவிரேஜ், சக்தி மகேந்திரா, பூஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மார்ஸ் பிரொக்ஷன்ஸ் சார்பில் கே.மனோகரன், டி.கண்ணன் வரதராஜ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரபாகர் மெய்யப்பன் இசையமைத்து வருகிறார். பீட்சா, டிமான்ட்டி காலனி போன்ற ஹாரர் படங்கள் போல் இந்த படமும் வித்தியாசமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏழு கிணறு பகுதியில் நடைபெற்றுள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 'சைத்ரா' என்ற பெயரில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.