‘சப்தம்‘ டப்பிங்கை தொடங்கிய ஆதி.. முக்கிய அப்டேட்
‘சப்தம்‘ படத்தின் டப்பிங்கை நடிகர் ஆதி தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிக்கும் திரைப்படம் ‘சப்தம்’. ‘ஈரம்’ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தில் லஷ்மி மேனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, லைலா, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தை 7ஜி ஃபிலிம்ஸ் மற்றும் அறிவழகனின் ஆல்பா பிரேம் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. ‘ஈரம்’ படத்திற்கு சிறந்த பின்னணி இசையை கொடுத்த தமன் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் ‘ஈரம்’ பட பாணிலேயே இப்படம் உருவாகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதையடுத்து பல கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங்கை நடிகர் ஆதி இன்று தொடங்கியுள்ளார். இது குறித்து புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.