ரவிமோகனுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பிய ஆர்த்தி...!

நடிகர் ரவிமோகனுக்கு அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை நீக்குமாறு மனைவி ஆர்த்திக்கு ரவி மோகன் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், "ஒருவர் தனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாரோ, அதையே தாமும் மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும்" என மனைவி ஆர்த்தி பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.ரவி மோகன், ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இருவருமே அவதூறு கருத்துக்களை வெளியிட நீதிபதி அண்மையில் தடை விதித்தார். இந்நிலையில், தனது மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமாருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய ரவி மோகன், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள அவதூறு கருத்துக்களை நீக்க வேண்டும் என கோரியுள்ளார்.
அதில், ரவி மோகனின் திருமண சர்ச்சை குறித்த அவதூறு செய்திகள் இடம் பெற்றுள்ள அனைத்து பதிவுகளையும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும், முகநூல், எக்ஸ், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என அனைத்து தளங்களுக்கும் இது பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. அப்படி நீக்கவில்லை என்றால், அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரவிமோகனை தொடர்ந்து அவரது மனைவி ஆர்த்தியும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உண்மை மற்றும் நீதியை நிலைநிறுத்தியதற்காக நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள ஆர்த்தி, நடிகர் ரவி மோகன் தன்னை அவதூறு செய்வதை தடுக்க விரும்புகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். "ஒருவர் தன்னை அவதூறு செய்வதை, ரவி மோகன் விரும்பாதபோது, தானும் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும்" என்று ரவி மோகனை ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.