ஹம்சவர்தன் நடிக்கும் `மகேஸ்வரா' படப்பிடிப்பில் விபத்து
'மகேஸ்வரா' திரைப்பட படப்பிடிப்பின் சண்டைக் காட்சியின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் நடிகர் ஹம்சவர்தன் உள்ளிட்டோர் காயங்களுடன் தப்பியதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் 'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் நடித்தவர் ஹம்சவர்தன். தற்போது இவர் நாயகனாக நடிக்கும் 'மகேஸ்வரா' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.
ரெட் டிராகன் எண்டர்டெயின்மென்ட் பேனரில் ஹம்சவர்தன் தயாரிக்கும் இப்படத்தை, மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஹரா' படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார். இந்நிலையில், படத்தில் உயர்ரக சொகுசு பென்ஸ் கார் ஒன்றை நொறுக்கி தரைமட்டமாக்கும் சண்டைக் காட்சி, அரியலூர் நெடுஞ்சாலையில் ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன் தலைமையில் படமாக்கப்பட்டது.
nullCrew of #Hamsavirdhan's suspense-filled commercial movie #Maheswara escapes with minor injuries during the filming of mass chasing & blasting fight sequence in Trichy.#RedDragonEntertainment @hamsavirdhan @vijaysrig @onlynikil pic.twitter.com/KWMiBuiBY2
— Sreedhar Pillai (@sri50) October 4, 2024
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில், சிறு காயங்களுடன் ஹம்சவர்தன் உள்ளிட்டோர் தப்பியுள்ளனர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ராம்கி, 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம், பி.எல்.தேனப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முதல் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில், முன்னணி நட்சத்திரங்கள் அடுத்தகட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சஸ்பென்ஸ் கலந்த அதிரடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகவுள்ள 'மகேஸ்வரா' படப்பிடிப்பு ரஷ்யா, பொலிவியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு மோகன் குமார் ஒளிப்பதிவு செய்ய, ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கிறார். இதுவரை இல்லாத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் 'மகேஸ்வரா' திரைப்படத்தில் ஹம்சவர்தன் நடிக்கிறார். அதிக பொருட்செலவில், விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.