பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா மரணம்.. தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !

பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
தெலுங்கில் பழம்பெரும் நடிகரும், பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு சினிமா உலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கிருஷ்ணாவின் இந்தியாவில் உள்ள சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்தியா நடிகர் சங்கமும் நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து நடிகர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கிய மூத்த நடிகர் கிருஷ்ணா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். நடிகர் திரு.கிருஷ்ணா அவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு திரையுலகில் இயங்கி வந்தவர். அவர் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பத்மபூஷன், தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் அவரது மகன் நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.