மருமகன் இயக்கிய ராஜா கிளி படவிழாவில் நடிகர் அர்ஜுன் நெகிழ்ச்சி...

arjun

ராஜா கிளி படம் எனது குடும்ப படம், இந்த படத்தில் என் சம்பந்தி தம்பி ராமையா ஹீரோவாக நடிக்கிறார். மாப்பிள்ளை உமாபதி இயக்கி உள்ளார் என நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார். ‘சாட்டை’, ‘அப்பா’, ‘வினோதய சித்தம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி - தம்பி ராமையா கூட்டணியில் ‘ராஜா கிளி’ என்னும் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது.இந்த படத்தின் கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என அனைத்தும் நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.rajakili

தம்பி ராமையா இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நேற்று(நவம்பர்.20) சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் நடிகர் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி பேசும்போது, “நான் வினோதய சித்தம் படம் பண்ணிவிட்டு உங்களிடம் சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன். எந்த படத்தை எப்போது பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று காலம்தான் முடிவு செய்கிறது என்பதை நான் மிகவும் நம்புகிறேன்.

’ஒரு இயக்குனரின் மூன்று படங்களை பார்த்தால் போதும், அந்த இயக்குனரின் கேரக்டர் என்னவென்று தெரிந்து விடும்’ என சொல்வார்கள். அது இயக்குனர்களுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்களுக்கும் பொருந்தும். அப்படித்தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை நான் புரிந்துகொண்டேன். அவரது படங்களே சொல்லும் அவர் யார் என்று.எந்த கதை எழுதினாலும் தம்பி ராமையாவை வைத்து தான் எழுதுவேன். இப்போது கூட அவரை வைத்து தான் ஒரு கதை எழுதி முடித்து இருக்கிறேன். இருவரும் சந்தித்தால் கதைகள் பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருப்போம். சினிமா மூலமாக இந்த சமூகத்திற்கு எதாவது கருத்து கூற வேண்டும் என நினைப்போம். தம்பி ராமையா அண்ணனிடம் அரசியல், சினிமா, இலக்கியம் என அனைத்தையும் பற்றி பேசலாம். அவரை ஒரு நூலகமாகத்தான் நான் பார்க்கிறேன்.உமாபதியுடன் ஒரு படம் நான் நடித்து இருக்கிறேன். ஒரு காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிக்கிறேன் என்று உமாபதி சொன்னபோது நான் கூட வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் உமாபதி தன்னம்பிக்கையுடன் நானே நடிக்கிறேன் என நடித்தார். நடிப்பு, பாட்டு, டான்ஸ் என அனைத்து தகுதியுமே இருக்கும் நடிகர் உமாபதி. இப்படி இருக்கும் ஒரு நடிகருக்கு சரியான கதவு திறக்கவில்லையே என்று நான் நினைத்தேன்.

rajakili

தற்போது, முதலில் அவருக்கான கதவை நடிகர் அர்ஜுன் திறந்துள்ளார். இப்போது இயக்குநராக இரண்டாவது கதவு திறந்துள்ளது. அவரது உழைப்புக்கும், ஒழுக்கத்திற்கும் இன்னும் பெரிய தளங்களில் வந்து நிற்பார். கூடவே நானும் நிற்பேன். நானும் தம்பி ராமையாவும் பேசிய பல கதைகளில் ஒன்று தான் இந்த ராஜா கிளி.

காலம் ஒரு மனிதனை எங்கே எல்லாம் கொண்டு போய் நிறுத்துகிறது. ஆனால் காலத்திடமிருந்து பதில் சொல்லாமல் இந்த உலகத்தில் இருந்து யாரும் தப்பித்துப் போய்விடவே முடியாது. அதனால் முடிந்தவரை உண்மையாக இருங்கள். எளிமையாக இருந்து விடுங்கள். காலம் நம்மை கைபிடித்து தூக்கி செல்லும் என்பது தான் இந்த படத்தின் கதை” என்றார்.

இதையடுத்து நடிகர் அர்ஜுன் பேசும்போது, “இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷல் தான். என்னுடைய குடும்ப படம் போல தான் இருக்கிறது. ஏனென்றால் என் சம்பந்தி ஹீரோ. மாப்பிள்ளை இயக்குநர். நான் கூட இதுவரை நடிக்காத அளவிற்கு ஒரு ரொமாண்டிக் பாடலில் ராமையா நடித்து இருப்பதாக சொன்னார்கள்.

இது சரியில்லை. இங்கு இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து கொண்ட அவர்களது அனுபவங்களே எனக்கு ஒரு படம் பார்ப்பது போல இருந்தது. நானும் எனது மாப்பிள்ளையும் ஒன்றாக இருக்கும் முதல் மேடை இது. இனி நிறைய பார்க்கப் போகிறீர்கள். எங்கள் கூட்டணியில் பல படங்களை உருவாக்கப் போகிறோம். சொல்லக்கூடாது. நாங்கள் செய்து காட்டுவோம்.

சுரேஷ் காமாட்சி நல்ல நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போது வரை என்னை அவர் கூப்பிடவே இல்லையே. அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

Share this story