தமிழ் சினிமாவில் இப்போது நெப்போடிஸம் இல்லை: நடிகர் பரத்
நான் நெப்போடிஸம் காலகட்டத்தை கடந்துவிட்டேன் எனவும், தற்போது தமிழ் சினிமாவில் நெப்போடிஸம் என்பது கிடையாது எனவும் நடிகர் பரத் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான பரத், தற்போது பிரகாஷ் முருகன் இயக்கத்தில் ’ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once upon a time in madras) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிஆர்ஓ ஆனந்த், ஹாரோன் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஜெகன் கவிராஜ் வசனம் எழுதியுள்ள இப்படத்தில் அபிராமி, பவித்ரா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் பரத், அபிராமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பரத், "நெப்போடிஸம் (nepotism) காலகட்டத்தை நான் கடந்துவிட்டேன். இப்போது உள்ள நடிகர்களுக்கு இருக்கலாம்.நான் நடிக்க வந்த காலகட்டத்தில் வாரிசு நடிகர்கள் நம்மை அழுத்தும் சூழல் இங்கு இல்லை. தமிழ் சினிமாவை பொறுத்தவரை உனக்கு திறமை இருந்தால் பயணித்து கொண்டே இருக்கலாம். நல்ல கதைகள் வரும் போது அதற்கான தயாரிப்பாளர்கள் அமைவதில்லை. நல்ல கதைகளுக்கு தயாரிப்பாளர்களின் விருப்பம் வேறு நடிகர்களாக உள்ளது.
அதனால் நமக்கு வரும் கதைகளை வைத்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டியது தான் வேறு வழியில்லை. தற்போது தமிழ் சினிமாவில் நெப்போடிஸம் என்பது கிடையாது . தமிழ் சினிமா அனைவரையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது" என்றார். கேரளாவில் தற்போது பெரும் பிரச்சனையாக உள்ள ஹேமா கமிட்டி பற்றி பற்றி நடிகை அபிராமியிடம் கேட்டபோது, "அந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு மேடை இதுவல்ல, பெண்கள் நிறைய பேசிவிட்டார்கள், இனி பேச வேண்டியவர்கள் பேச வேண்டும்" என்று பதில் அளிக்க மறுத்து விட்டார்.