அரசு மருத்துவமனையில் நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம்...!

சென்னை அருகே அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை, நோயாளிகள் தவிக்கின்றனர் என்று நடிகர் கருப்பு புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் கஞ்சா கருப்பு. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற கஞ்சா கருப்பு சமீப காலங்களில் அதிக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில், சென்னையில் அரசு மருத்துவமனைக்கு சென்ற நடிகர் கஞ்சா கருப்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இன்று காலை சென்னை போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு நடிகர் கஞ்சா கருப்பு சென்றுள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் நீண்ட காலமாக காக்க வைத்ததாக நடிகர் கஞ்சா கருப்பு குற்றம்சாட்டினார். அதேநேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். டாக்டர்கள் இல்லாத காரணத்தால் அங்கு இருந்த மற்ற நோயாளிகள், மூதாட்டியை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலை 7 மணியில் இருந்தே மருத்துவர்கள் இல்லாமல் காக்க வைக்கப்பட்டதாக கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். திடீர் போராட்டம் காரணமாக மருத்துவமனையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.