காற்றே வராத குகைக்குள் ஷூட்டிங்... ரிஸ்க் எடுத்து நடித்த ஜித்தன் ரமேஷ் !

jthan Ramesh

காற்றே வராத குகைக்குள் 14 மணி நேரம் ரிஸ்க் எடுத்து நடிகர் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். 

பிரபல தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரியின் மகன் தான் ஜித்தன் ரமேஷ். கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான 'வித்யார்த்தி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  தமிழில் 'ஜித்தன்' படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதன்பிறகு மது, நீ வேணும்டா செல்லம், மதுரை வீரன், புலி வருது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Jithan Ramesh

பின்னர் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷூடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ஜித்தன் ரமேஷ் நடித்து வரும் திரைப்படம் 'ரூட் நம்பர் 17'. 

Jithan Ramesh

இந்த படத்தை 'தாய்நிலம்' என்ற படத்தை இயக்கிய ஜி தேவன் தயக்கி வருகிறார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா நடித்து வருகிறார். வில்லனாக ஹரிஷ் பெராடி நடித்து வருகிறார். இவர்களுடன் 'அருவி' மதன், அமர் ராமச்சந்திரன், அகில் பிரபாகர், நிஹால், ஜெனிபர், பிந்து காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  நேனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் அவுசேபச்சன் இசையமைத்து வருகிறார்.

Jithan Ramesh

மேலும் பல ரிஸ்க்கான சாகச காட்சிகளில் கூட டூப் போடாமல் நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ். அந்தவகையில் இந்த படத்தில் பூமிக்கு அடியில் 5500 சதுர அடியில் மிகப் பிரமாண்டமான குகை செட் ஒன்றை தென்காசிக்கு அருகில் உள்ள காட்டிற்குள் அமைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்த பெரும்பாலான காட்சிகள் இந்த குகை செட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளன. 

 

குகைக்குள் காற்று தாரளமாக வருவதற்கான வழி இல்லை என்றாலும் மின்விசிறியை பயன்படுத்தினால் படமாக்கப்படும் காட்சிகளின் எதார்த்தத்தை பாதிக்கும் என்பதால் அதை தவிர்த்து விட்டு 55 டிகிரி செல்சியஸ் அனல் பறக்கும் வெப்பத்தில் 22 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 14 மணி நேரத்திற்கு மேல் அந்த வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார் ஜித்தன் ரமேஷ்.

 

சில சமயங்களில் வெப்பத்தை தாங்கமுடியாமல் தண்ணீரை தன்மேல் இறைத்து சிறிதளவு வெப்பத்தை தணித்துக்கொண்டு அதன்பின்னரும் ஓய்வு கூட எடுக்காமல் தொடர்ந்து நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Share this story