"இறுதிவரை உற்சாகம் குறையாமல் வாழ்ந்தவர் ராஜேஷ்..” நடிகர் கமல் இரங்கல்

பிரபல நடிகர்ராஜேஷ் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பின்பு முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். இதனிடையே ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். இதைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார்.
இந்த நிலையில் ராஜேஷ்(76) உடல் நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (29.05.2025) அதிகாலை காலமகியுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என்…
— Kamal Haasan (@ikamalhaasan) May 29, 2025
இந்த சூழலில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக ராஜேஷ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.