“நாட்டையே ஆட வைத்த பாடலுக்கு உச்சபட்ச அங்கீகாரம்” - நடிகர் கமல் !

rrr

 நாட்டையே ஆட வைத்த பாடலுக்கு உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார். 

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. தெலுங்கு முன்னணி நடிகர்களாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதல்முறையாக இணைந்து இப்படத்தில் நடித்திருந்தனர். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 

rrr

கீரவாணி இசையில் உருவாகி ரசிகர்களை ஆட்ட போட வைத்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இணைந்து பெற்றனர். 

rrr

ஆஸ்கர் விருதுபெற்ற ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் உலகநாயகன் கமலஹாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டையே ஆட வைத்த பாடலுக்கு உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஓர் இந்தியனாகவும், சக கலைஞனாகவும் உங்கள் சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறேன். இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குனர் ராஜமௌலி மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.


 

Share this story