தன்னார்வலர்களுக்கு உதவித்தொகை வழங்கிய நடிகர் கார்த்தி
கடந்த அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக நடந்த ‘கார்த்தி 25’ விழாவில் பல்வேறு மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1 கோடி உதவித் தொகை வழங்கினார் நடிகர் கார்த்தி. இதையடுத்து, இன்று 25 சமூக செயற்பாட்டாளர்களை தேர்வு செய்து அவர்களை கவுரப்படுத்தும் விதமாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, “இங்கு அன்பு சார்ந்த இத்தனை பேரை ஒருங்கிணைத்ததே மிகப்பெரிய சந்தோசமாக இருக்கிறது. 25 படத்தை முடித்து விட்டேன். இந்த தருணத்தில் மக்களுக்கு நன்றி சொல்ல ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வந்தாலும் அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். முதல் கட்டமாக 1 கோடி ரூபாய் அளவில் அன்னதானம் வழங்க முடிவு செய்தேன். நான் பணமாக தான் கொடுத்தேன். ஆனால், என்னுடைய தம்பிகள் ஒவ்வொரு பகுதியாக சென்று தினமும் 1000 பேருக்கு அவர்கள் கையால் சாப்பாடு போட்டு இருக்கிறார்கள் என்றுகூறினார்.