நடிகர் 'மாரிமுத்து' மரணம்: ‘இதயம் உடைகிறேன்…..’ கவிஞர் 'வைரமுத்து' இரங்கல்.

photo

நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மரணமடைந்த செய்திகேட்டு சின்னத்திரை, வெள்ளித்திரையை கடந்து ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

photo

கவிஞர் வைரமுத்துவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி தனது திரை வாழ்வை துவங்கியவர் மாரிமுத்து. பின்னர், மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ ஆகிய படங்களை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். இயக்கம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் அசத்தினார். வாலி, பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து அசத்திய மாரிமுத்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலமாக தான்.

இப்படி வெற்றியின் உச்சத்தில் இருந்த அவர் மாரடைப்பால் காலமானார்.தொடர்ந்து அவரது மரணத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது “தம்பி மாரிமுத்துவின்

மரணச் செய்தி கேட்டு

என் உடம்பு ஒருகணம்

 ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்

சென்றுகொண்டிருந்தவனை

மரணத்தின் பள்ளத்தாக்கு

 விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்

உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து

நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்

திருமணம் செய்துவைத்தேன்

இன்று அவன்மீது

 இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு

இதயம் உடைகிறேன்

 குடும்பத்துக்கும்

கலை அன்பர்களுக்கும்

கண்ணீரைத் துடைத்துக்கொண்டே

 ஆறுதல் சொல்கிறேன்” என கவிதை மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.


 

  

Share this story