மயில்சாமியின் மரணம் தற்செயலானது அல்ல... இது அவனின் கணக்கு - நடிகர் ரஜினிகாந்த்

mayilsamy

நடிகர் மயில்சாமி மறைவையொட்டி அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

100-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மயில்சாமி. ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கத்தில் உள்ள சிவ கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து மயில்சாமியின் உடல் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரில் தனது அண்ணன் சதாபிஷேத்திற்காக சென்ற ரஜினி, அவசரமாக இன்று சென்னை திரும்பினார். 

mayilsamy

விமான நிலையத்திலிருந்து உடனடியாக சாலிகிராமம் சென்ற ரஜினி, நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தன்னுடைய நீண்ட கால நண்பராக இருந்தவர் மயில்சாமி. அவரின் 23 வயதில் இருந்து எனக்கு தெரியும். மிமிக்ரி கலைஞராக சினிமாவில் நுழைந்தவர். எம்ஜிஆர் மற்றும் சிவனின் தீவிரமான ரசிகராக இருந்தவர். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்போம். அப்போது சினிமா எப்படி இருக்குன்னு கேட்பேன். அப்போதெல்லாம் சினிமா பற்றி கேட்கும்போது, சிவனையும், கோயில்களையும் பற்றி மட்டுமே பேசுவார். 

mayilsamy

மேலும், ஒவ்வொரு கார்த்திகை தீபத்துக்கும் திருவண்ணாமலை போயிடுவாரு. அங்கு வரும் கூட்டத்தை பார்த்து சந்தோஷப்பட்டு எனக்கு போன் பண்ணுவாரு. அவரோட முதல் படத்துக்கு வருகிறது கூட்டம் மாதிரி உற்சாகம் ஆகுவார். கடந்த கார்த்திகை தீபத்திற்கு போன் பண்ணாரு. நான் படப்பிடிப்பில் இருந்ததால எடுக்க முடியல. அடுத்து மூன்று திரும்பவும் கூப்பிட்டாரு. அடுத்ததாக அவரை சந்திக்கும் போது மன்னிப்பு கேட் நினைத்தேன். ஆனால் அவர தற்போது மறைந்துவிட்டார். 

விவேக் மற்றும் மயில்சாமி ஆகிய இருவரின் மரணமும் சினிமா துறைக்கும், சமூகத்திற்கு பேரிழப்பாகும். சிவராத்திரி அன்று மயில்சாமி இறந்தது, தற்செயலாக நடந்தது கிடையாது. அது அவனின் கணக்கு. தனது தீவிர பக்தனை சிவன் அழைத்துக் கொண்டார் என்று அவர் தெரிவித்தார். அதேபோன்று மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.  

 


 

Share this story