நடிகர் பிரகாஷ் ராஜிடம் அமலாக்கத்துறையினர் 4 மணி நேரம் விசாரணை..!
ஆன்லைன் சூதாட்ட ஆப்களில் ஏராளமான பிரச்சனைகள் நிலவி வருகின்றன. அதை நம்பி பயன்படுத்திய பலர் கடன் நெருக்கடிக்கு உள்ளாகி, தற்கொலை செய்யும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மறுபக்கம் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்களை வைத்து சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்தும் வருகிறார்கள்.
இதுகுறித்து அமலாக்கத்துறையினர் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்ய முடிவு செய்து அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி ராணா டகுபதியை கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜராக சொல்லியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அனுப்பிய சம்மன் அடிப்படையில், அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணை நிறைவடைந்த பிறகு பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். அரசு அதிகாரியாக அவர்கள் தங்களின் கடமையை செய்கிறார்கள். நான் இந்த நாட்டின் ஒரு குடிமகனாக பதில் அளித்தேன். கடந்த 2016 ஆம் ஆண்டு சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்தேன். பிறகு தார்மீக அடிப்படையில் அது தவறு என தெரிந்து அந்த விளம்பரங்களில் நடிப்பதை விட்டுவிட்டேன்.
நான் சூதாட்ட செயலிகள் மூலம் சம்பாதிக்கவில்லை. அதன் மூலம் எனக்கு எந்த தொகையும் கிடைக்கவில்லை. அதில் பணம் சம்பாதிக்கவும் நான் விரும்பவில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதன் பெயரில் ஆஜராகி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளேன். என் மனசாட்சிபடி இதில் செயல்பட்டுள்ளேன். அதை அதிகாரிகளிடம் விளக்கமாக கூறிவிட்டேன்.
அவர்கள் எப்போது என்னை அணுகினார்கள், என்ன நடந்தது என்று அனைத்து தகவல்களையும் கூறிவிட்டேன். விசாரணை நிறைவடைந்துவிட்டது. இதில் ஏதேனும் அரசியல் பின்னணி இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதிகாரிகள் தங்கள் கடமையை செய்துள்ளனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளேன். மக்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகள் பயன்படுத்துவதை தவிர்த்து சுயமாக சம்பாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

