நடிகர் பிரித்விராஜ் - பார்வதி நடிக்கும் NoBody படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்...!

no body

நடிகர் பிரித்விராஜ் - பார்வதி நடிக்கும் NoBody படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. 


நடிகர் பிரித்விராஜ் இரண்டு வருடங்களாக மோகன்லாலை வைத்து தான் இயக்கி வந்த எம்புரான் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இன்னொரு பக்கம் தெலுங்கில் சலார், ஹிந்தியில் படே மியான் சோட்டே மியான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதேசமயம் மலையாளத்தில் அதிக படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஏற்கனவே தான் நடித்து வந்த ஆடுஜீவிதம் மற்றும் விலாயத் புத்தா ஆகிய படங்களை நடித்து முடித்தார். இதில் ஆடுஜீவிதம் மற்றும் குருவாயூர் அம்பலநடையில் படம் கடந்த வருடம் வெளியானது.


தற்போது எம்புரான் வெளியான நிலையில் மீண்டும் நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பி நோபடி என்கிற படத்தில் நடிக்கிறார் பிரித்விராஜ். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பார்வதி நடிக்கிறார். கடந்த 2018ல் பிரித்விராஜ், பார்வதி இருவரும் மை ஸ்டோரி மற்றும் கூடே என இரண்டு படங்களில் இணைந்து நடித்திருந்தனர். ஒரே வருடத்தில் அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு படங்களையும் ரோஷினி தினகர் மற்றும் அஞ்சலி மேனன் என இரண்டு பெண் இயக்குனர்கள் தான் இயக்கியிருந்தார்கள்.

இந்த இரண்டு படங்களுமே வரவேற்பு பெற தவறின. இந்த நிலையில் தான் ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் இந்த நோபடி என்கிற படத்திற்காக இவர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள வெலிங்டன் தீவில் படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. இந்த படத்தை இயக்குனர் நிசாம் பஷீர் என்பவர் இயக்குகிறார். இவர் கடந்த 2019-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற கெட்டியோலானு என்டே மாலாக்க படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story