"ஆணவக்கொலை வன்முறை அல்ல அக்கறைதான்.." நடிகர் ரஞ்சித் மீண்டும் சர்ச்சைப் பேச்சு..!!

Ranjith

சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், நடிகர் ரஞ்சித் ஆணவக் கொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் சுயமரியாதை திருமணம், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி போன்றவற்றிற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நடிகர் ரஞ்சித், இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. குறிப்பிட்ட சாதியினரைப் பற்றி மோசமான கருத்துகள், சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் கருத்துகள் இப்படத்தில் இடம்பெற்றிருப்பதாக டிரெய்லர் வெளியானது முதல் கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் இப்படத்தின் மீது முன்வைக்கப்பட்டு வந்தன.இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த நடிகர் ரஞ்சித், நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்திருந்தார். நாடகக்காதல் நடத்தி வைக்கவே சில கும்பல், அலுவலகம் அமைத்து வேலை செய்வதாகவும், தான் நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் தன்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள் என்றும் ரஞ்சித் சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்திருந்தார்.


இந்நிலையில், சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள திரையரங்கில் நடிகர் ரஞ்சித் ரசிகர்களுடன் அமர்ந்து கவுண்டம்பாளையம் படத்தை பார்த்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவுண்டம்பாளையம் படத்தில் தேவையற்ற காட்சிகள் இருப்பதாகக் கூறி தன்னை எதிர்ப்பவர்கள் படம் பார்க்காமல் பேசாக் கூடாது என்றார். தன்னை நேரடியாக எதிர்க்க முடியாமல் புறமுதுகில் குத்துவது போல் செயல்படுவதாகவும் விமர்சித்தார். மேலும், ஆணவக் கொலை குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஞ்சித் ஆணவக்கொலை என்பது வன்முறை அல்ல.. அக்கறைதான் என புது விளக்கம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

Share this story